அதிமுகவிற்கும் ஓபிஎஸ்-க்கும் இனி எந்த காலத்திலும் தொடர்பில்லை.! நீதிமன்ற தீர்ப்புக்கு ஜெயக்குமார் வரவேற்பு.!
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது . இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து நீதிமன்றங்களை நாடி வந்தது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டது.
அதிமுகவில் இணைந்தார் நடிகை காயத்ரி ரகுராம்!
இதனை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்து இருந்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டது செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து ஓபிஎஸ் தரப்பு செய்து இருந்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
இந்த தீர்ப்பு குறித்து இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஓபிஎஸ் எனும் அதிமுக துரோகி, அதிமுக அலுவலகத்தை, எம்ஜிஆர் மாளிகையை, இதய தெய்வம் அலுவலகத்தை சூறையாடி, முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றார். அதிமுக வளர்ச்சியில் பொறுத்துக் கொள்ள முடியாமல் அதனை எந்த வகையிலாவது குழப்பத்தை ஏற்படுத்தி விட வேண்டும் என வக்கிர புத்தியோடு பல்வேறு முறை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு ‘குட்டு’ வாங்கிய ஓபிஎஸ் என கடுமையாக விமர்சனம் செய்தார்.
மேலும், உயர் நீதிமன்றத்தை தொடர்ந்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்து, தற்போது உச்சநீதிமன்றத்திலும் இந்த வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன் மூலம் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என மீண்டும் உறுதியாகியுள்ளது. இனி எந்த காலத்திலும் ஓபிஎஸ்-க்கும் அதிமுகவுக்கும் தொடர்பு இல்லை.
ஓபிஎஸ் இனி அதிமுகவின் அடையாளம்கொண்ட உடையை உடுத்த முடியாது. இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த முடியாது. இரட்டை இலை சின்னம் கொண்ட லெட்டர் பேட் பயன்படுத்த முடியாது. அதிமுக எனும் துரோகி திமுகவின் பிடீம், சந்தர்ப்பவாதிக்கு உச்சநீதிமன்றம் சரியான பாடத்தை புகட்டியுள்ளது என ஓ.பன்னீர்செல்வம் மீது காட்டமான விமர்சனத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்வைத்து உள்ளார்.