கேலோ இந்தியா போட்டி! பதிவு செய்ய புதிய செயலியை அறிமுகம் செய்த தமிழக அரசு!

TNSPORTS app

6-வது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள், தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் வரும் ஜனவரி 19 முதல் 31 வரை நடைபெற உள்ளன. கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து, 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சுமார் 6000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் 1600-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்க உள்ளனர்.

இந்த ஆண்டு 27 பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஸ்குவாஷ் அறிமுக விளையாட்டாக இடம் பெறுகிறது. இதில். தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் டெமோ விளையாட்டாக (Demo Sports) இடம்பெற உள்ளது. இப்போட்டிகளை விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் நேரில் பார்வையிட வசதியாக அனுமதி சீட்டுகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. தொடக்க விழாவில் பங்கேற்று இப்போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இதற்காகவும், மற்ற நிகழ்ச்சிக்காகவும் பிரதமர் மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக நாளை தமிழகம் வருகிறார். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

3- நாள் பயணமாக நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.!

இந்த நிலையில், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நாளை தொடங்க உள்ள நிலையில், புதிய செயலியை அறிமுகம் செய்தது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்.  அதாவது, இப்போட்டியை நேரில் காண விரும்பும் பார்வையாளர்கள் TNSPORTS என்ற செயலியின் மூலமாகவும் மற்றும் https://www.sdat.tn.gov.in என்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் வாயிலாக தங்களது விவரங்களை பதிவு செய்து, அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், போட்டி நடைபெறும் மாவட்டம். விளையாட்டு மற்றும் தேதியை தேர்வு செய்து பதிவு செய்ய வேண்டும். பின்னர் தங்களது அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். நேரில் போட்டியை காண்பதற்கு செல்லும் போது பதிவிறக்கம் செய்த அனுமதி சீட்டினைஅலை பேசியிலோ அல்லது அச்சிடப்பட்ட தாளிலோ கொண்டு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்