4 வயது மகனை கொன்ற பெண் CEO.? விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்…
பெங்களூருவை சேர்ந்த தனியார் AI தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரி சுசனா சேத் எனும் 39 வயது பெண் கடந்த 6ஆம் தேதி தனது 4 வயது மகனுடன் கோவா சென்றுள்ளார். அங்கு ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்துள்ளார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம்(ஞாயிறு) நள்ளிரவில் கார் மூலம் பெங்களூரு நோக்கி வந்துள்ளார்.
கோவாவில் இருந்து பெங்களூருக்கு காரில் பயணிக்க அதிக கட்டணம், அதிக நேரம் என்பதால், விடுதி ஊழியர்கள் விமானத்தில் பயணிக்கும்படி கேட்டுள்ளனர். ஆனால் சுசனா சேத் அதனை மறுத்து காரில் பயணித்துள்ளார். மேலும், வரும் போது உடன் இருந்த மகன் திரும்ப செல்லும் போது இல்லை என்பதையும் ஊழியர்கள் சந்தேகித்தனர்.
கோவாவில் கொலை… 4 வயது மகனின் உடலுடன் பெங்களூருக்கு தப்பிய பெண் CEO.!
சுசனா சேத் காரில் கிளம்பியவுடன், அவர் தங்கி இருந்த அறையை ஊழியர்கள் சுத்தம் செய்ய சென்றுள்ளனர். அப்போது அங்கு ரத்த கரை இருப்பதை கண்டறிந்த ஊழியர்கள் கோவா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், அவரது 4 வயது மகன் இல்லை என்ற விவரத்தையும் சிசிடிவி காட்சிகள் மூலம் கோவா போலீசிடம் விடுதி ஊழியர்கள் கூறியுள்ளனர்.
இதனை அடுத்து, கார் ஓட்டுனரை தொடர்பு கொண்ட போலீசார் சுசனா சேத்திடம் பேசி, 4 வயது மகன் பற்றி விசாரித்துள்ளனர். அதற்கு சுசானா சேத், தனது மகன் நண்பர் வீட்டில் இருப்பதாக விலாசம் கொடுத்துள்ளார். அந்த விலாசத்தில் காவல்துறையினர் சோதனை செய்த போது சுசானா கூறியது பொய் என தெரிந்தது.
மேலும் சந்தேகத்தை உறுதிப்படுத்திய பின்னர், கோவா போலீசார் சூசகமாக செயல்பட்டு, கார் ஓட்டுனருக்கு போன் செய்து கொங்கனி மொழி (கோவா உள்ளூர் மொழி) மூலம் பேசி, கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள காவல் நிலையத்திற்கு வாகனத்தை இயக்க கேட்டுக்கொண்டுள்ளனர். இதனை அறிந்த கார் ஓட்டுநர் , உடனடியாக சித்ரதுர்கா காவல் நிலையத்திற்கு வாகனத்தை கொண்டு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கர்நாடக போலீசார் (திங்கள் கிழமை) சுசான சேத்திடம் விசாரணை மேற்கொண்டு, அவர் கொண்டு வந்த பைகளை சோதனை செய்தனர்.
அதில் ஒரு சூட்கேசில் சுசானா சேத்தின் 4 வயது மகன் உடல் இருப்பது தெரியவந்தது. இந்த தகவலை கோவா போலீசாரிடம் கர்நாடக போலீசார் கூறிவிட, கோவா போலீசார் நேற்று இரவு சுசனா சேத்தை கர்நாடகாவில் கைது செய்தனர். இன்று கோவா நீதிமன்றத்தில் அவரை ஆஜர் செய்து 5 நாள் நீதிமன்ற காவல் எடுத்து விசாரணையை துவங்கி உள்ளனர். மேலும், இறந்துபோன 4 வயது சிறுவன் உடல் கர்நாடக மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சுசானா செத்திடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சுசானா சேத் தனது கணவரை தற்போது பிரிந்து இருப்பதாகவும், கணவர் இந்தோனீசியாவில் வேலை செய்து வருவதாகவும், விவாகரத்துக்கு நீதிமன்றத்தில் இருவரும் விண்ணப்பித்து இருப்பதும் தெரியவந்தது. மேலும், நீதிமன்ற உத்தரவுப்படி ஞாயிறு கிழமைகளில் மகனை சந்திக்க சுசானா சேத்தின் கணவர் வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் தான் கோவா சென்று இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
தற்போது கோவா விடுதி மேற்பார்வையாளரின் புகாரின் பேரில், கோவா போலீசார் சுசானா சேத்துக்கு எதிராக ஐபிசி பிரிவுகள் 302 (கொலை வழக்கு), 201 (குற்றத்த்தை மறைப்பது) மற்றும் கோவா குழந்தைகள் சட்டம் பிரிவு 8 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்ற்னர்.
விசாரணையில் சுசனா சேத் , தான் தனது மகனை கொலை செய்யவில்லை என்றும், வழக்கமாக எனது சூட்கேஸை தூக்கும்போது இருக்கும் எடையை விட தற்போது அதிகமாக இருப்பதை தான் உணர்ந்தேன். ஆனால் அப்போது எதோ நினைப்பில் நான் பொருட்படுத்தவில்லை என்றும் சேத் போலீஸ் விசாரணையில் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவில் இருந்து சிறுவனின் பிரேத பரிசோதனை விவரம் தெரியவந்த பின்னர் தான் மரணம் எப்போது எவ்வாறு நடந்தது என்ற முழு விவரமும் தெரிய வரும் என கூறப்படுகிறது.