வெளுத்து வாங்கப்போகும் மிக கனமழை: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் மிகத்தீவிரமாக உள்ளது.  தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புயல் எச்சரிக்கை இல்லை என்றாலும், தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால், மீனவர்களுக்குஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், லட்சதீவு பகுதிகளை ஒட்டிய கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை (10.01.2024) தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.