நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை – அமைச்சர் சிவசங்கர்
ஊதியம், காலி பணியிடங்கள் நிரப்புதல், அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் மாநில அரசின் நிதியுதவி, ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி உள்ளிட்ட 6 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் வரும் 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
ஜனவரி 9ம் தேதி முதல் தமிழகத்தில் அரசுப் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதை கருத்தில் கொண்டு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துறை உத்தரவிட்டது. இந்த சூழலில், போக்குவரத்துத்துறை தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு செய்தது என்ன? முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி!
இதனைத்தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துத்துறை தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகள் தொடர்பாக நிதித்துறையிடம் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும். தொழிற்சங்களின் கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்க ஒருநாள் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்தார்.
இதனிடையே, பேசிய தொழிற்சங்கத்தினர், பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். நிதித்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவை அமைச்சர் அறிவிக்க வேண்டும். இதனால் அமைச்சரின் முடிவுக்காக காத்திருக்கிறோம், அதுவரை வேலைநிறுத்தம் (வரும் 9ம் தேதி) முடிவு தொடரும் என்றும் அமைச்சரின் முடிவை பொறுத்து சங்கத்தினர் கலந்து பேசி முடிவெடுப்போம் என தெரிவித்தனர்.