தோனிக்கு பிறகு சாதனை படைத்த ரோஹித் ஷர்மா..!
இந்தியா -தென்னாப்பிரிக்கா இடையான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில், முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இருப்பினும், தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இந்திய அணி 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனால் இந்தியா 109 ரன்கள் முன்னிலையில் இருந்தபோது தென்னாபிரிக்கா தனது 2-வது இன்னிங்ஸில் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 12 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதன் மூலம் கேப்டன் ரோகித் சர்மா, ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி சாதனையை சமன் செய்தார். இதற்கு முன் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை சமன் செய்த முதல் கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றிருந்தார்.
தோனியை சமன் செய்த ரோஹித்:
தோனிக்கு பிறகு தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை டிரா செய்த இரண்டாவது இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். தோனியின் தலைமையின் கீழ், 2010-11ல் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடர் 1-1 என டிராவில் முடிந்தது. அதன்பிறகு ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை டிரா செய்துள்ளது.
இது தவிர, 1992-93, 1996-97, 2001-02, 2006-07, 2013, 2018 மற்றும் 2021-22 ஆகிய ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவில் விளையாடிய அனைத்து டெஸ்ட் தொடரிலும் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது. இதுவரை தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரை ஒருமுறை கூட இந்திய அணி கைப்பற்றியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.