தரக்குறைவான விமர்சனம் வேண்டாம்! உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் – இபிஎஸ்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கான கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக ஐடி விங்க் நிர்வாகிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த வருடத்தின் முதல் கூட்டமாக தகவல் தொழில்நுட்ப பிரிவினருடன் நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில், கட்சி உறுப்பினர்களை தயார்படுத்துதல், புதிய வாக்காளர்களை ஈர்ப்பது, சமூக வலைதளங்களில் செயல்பாடுகளை மேம்படுத்துதல் என பல்வேறு விஷயங்கள் குறித்து அறிவுறுத்தல் வழங்கியதாக கூறப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, சமூக வலைத்தளங்களில் செயல்படும் அதிமுகவினர் தரைக்குறைவாக விமர்சனம் செய்ய வேண்டாம்.
இபிஎஸ் குறித்த ரகசியம்… டிடிவி தினகரனுடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தல்… ஓபிஎஸ் பேட்டி!
தகவல் தொழில்நுட்பப் பிரிவு என்னுடைய நேரடி கட்டிப்பாட்டில் உள்ளது. அதிமுக ஐடி பிரிவினர் எதற்காகவும் யாருக்காகவும் அஞ்ச வேண்டாம். பிற கட்சிகளின் ஐடி விங் போல வெறுப்பை உண்டாக்க வேண்டாம். அப்படி வெறுப்பை உண்டாக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைத்தளங்கள் வாயிலாக செயல்படும் அதிமுகவினர் யாரையும் மரியாதை குறைவாகவோ நாகரிகமற்ற முறையிலோ விமர்சிக்க கூடாது.
அதிமுகவின் சாதனைகளையும், திமுக அரசு செய்யும் தவறுகளையும் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். அதிமுகவுக்காக உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். சமூக வலைத்தளங்களில் நிர்வாகிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுக்களில் இருப்பவர்கள் சமூக வலைதள செயல்பாடு குறித்த அனைத்தையும் மறைமுகமாக கண்காணிப்பார்கள் என்றும் எந்த விவகாரம் என்றாலும் தன்னை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் சார்பில் “புரட்சித்தமிழரின் MASTERCLASS” என்ற தலைப்பில் இந்த கூட்டம் நடைபெற்றது.