அதானி வழக்கு: செபியே விசாரிக்கும்.. சிறப்பு புலனாய்வு குழு தேவையில்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இந்திய தொழிலதிபர் அதானி குறித்தும், பங்குசந்தை விவரம் குறித்தும் அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த ஆண்டு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், பங்குச்சந்தையை அதானி குழுமம் முறைகேடாக பயன்படுத்துகிறது என குற்றம் சாட்டியது.
அதாவது, அதானி நிறுவனம் தங்களது நிதி நிலையை மறைத்து, பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் சம்பாதிப்பதாக கூறியிருந்தது ஹிண்டன்பர்க் நிறுவனம். இந்த விவகாரம் பூதகரமாக வெடித்தது. இதனை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றம் வரை எடுத்து சென்று பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என்றும் விசாரிக்க வேண்டும் எனவும் சாடினர். ஹிண்டன்பர்க் அறிக்கையை அடுத்து அதானி குழும பங்குகள் வெகுவாக சரிந்து உலக பணக்காரர் வரிசையில் இருந்து வெகுவாக சரிந்தார் அதானி. இதனை குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
அதானி குழும முறைகேடுகள் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராயக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, இந்திய பங்குச்சந்தையை நிர்வகிக்கும் செபியானது, அதானி குழுமம் தொடர்பாகவும், ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாகவும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
கோர விபத்து! நேருக்கு நேர் மோதிய பேருந்து – லாரி! 12 பேர் பலி!
இருப்பினும், அதானி குழும முறைகேடுகள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என கோரப்பட்டது. இதன்பின், அதானி வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில், அதானி குழும முறைகேடுகள் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராயக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அதானி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், அதானி குழுமத்தின் வழக்கை பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே (செபி) விசாரிக்கும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வழக்கின் விசாரணையை செபியிடம் இருந்து மாற்ற எந்த அடிப்படையும் இல்லை. இதனால், அதானி குழுமம் மீதான முறைகேடு புகார் தொடர்பான விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற அவசியமில்லை. 22 புகார்களில் 20 புகார்கள் மீதான விசாரணையை செபி முடிந்துவிட்டது என தெரிவித்த உச்சநீதிமன்றம், மீதமுள்ள இரண்டு வழக்குகளின் விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க செபிக்கு உத்தரவிடப்பட்டது.
அதானி குழுமம் மீதான முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்த செபிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என கூறி, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மேலும், உச்சநீதிமன்றம் அமைத்த 6 பேர் கொண்ட குழு அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..