ஜப்பான் நிலநடுக்கம்: 155 அதிர்வுகள்.. பெரும் சேதம்.. ஏராளமான உயிரிழப்புகள் – அந்நாட்டு பிரதமர் பேச்சு!
புத்தாண்டு தினத்தன்று ஜப்பானை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பெரும் சேதங்களை ஏற்படுத்தியதாக அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். ஜப்பான் மேற்கு பகுதியில் நேற்று பிற்பகல் 12 மணிக்கு மேல் 30க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதில், குறிப்பாக 7.6 ரிக்டர் அளவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவானது என அந்நாட்டு நிலநடுக்கவியல் மையம் தெரிவித்திருந்தது.
ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாகப் பதிவான இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஹோன்சு பகுதி அருகே சுமார் 15 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. இந்த அடுத்தடுத்த நிலநடுக்கத்தால், வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சைமடைந்தனர். இந்த நிலநடுக்கங்களை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு, பின்னர் திரும்ப பெறப்பட்டது.
இருப்பினும், நிலநடுக்கம், சுனாமி அலை தாக்குதலால் பெரும் பாதிப்பு, சேதம், ஏரளமான உயிரிழப்புகள் இருக்கும் என கூறப்பட்டது. பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் தற்போதுவரை மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ஜப்பானை உலுக்கிய இந்த பயங்கர நிலநடுக்கங்கள் காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்தாகவும், பலர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
ஜப்பான் நிலநடுக்கம்! இதுவரை 12 பேர் உயிரிழப்பு… தற்போதைய நிலவரம் என்ன?
இந்த நிலையில், நேற்று முதல் ஜப்பான் 155 நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் முக்கிய 7.6 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் இஷிகாவாவில் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 3 ரிக்டர் அளவுக்கு அதிகமாக இருந்ததாகவும், இன்று குறைந்தது 6 முறை வலுவான நடுக்கங்கள் உணரப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இந்த சூழலில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறுகையில், புத்தாண்டு தினத்தன்று ஜப்பானைத் தாக்கிய பயங்கர நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில், ஏராளமான உயிரிழப்புகள், கட்டிட இடிபாடுகள் மற்றும் தீ விபத்துகள் உட்பட மிகப் பெரிய சேதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மீட்க சவாலாக இருக்கிறது.
7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சுனாமி அலைகளை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ஜப்பானில் மேற்கு பகுதியில் 155 அதிர்வுகள் ஏற்பட்டன என்றார். மேலும், ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி அலைகள் காரணமாக இதுவரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும் பல காயம் அடைந்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.