விஜயகாந்த் போல நடிகர் வரலாம்… அவரைப்போல ஒரு மனிதர் மீண்டும் பிறக்கப்போவதில்லை… சீமான் வருத்தம்.!

DMDK Leader Vijayakanth - NTK Leader Seeman

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை உயிரிழந்தார். அவரது உடல் நேற்று சென்னை சாலிகிரமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு முதலில் கொண்டுசெல்லப்பட்டது. அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு கோயம்பேடு கட்சி தலைமை அலுவலகதிற்கு விஜயகாந்த் உடல் கொண்டுசெல்லப்பட்டது.

அதனை தொடர்ந்து , சென்னை தீவு திடலில் விஜயகாந்த் உடல் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது. அங்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் , தொண்டர்கள் என பலர் விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று காலை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

கேப்டன் விஜயகாந்த் நினைவுகள் 1952…2023.!

அஞ்சலி செலுத்திய பின்னர் அவர் பேசுகையில், விடுதலை புலிகள் பிரபாகரன் மீது மரியாதை கொண்டவர் கேப்டன் விஜயகாந்த். அதனால் தான அவரது மகனுக்கு பிரபாகரன் என பெயர் வைத்தார். அவரது 100வது படத்திற்கு கேப்டன் பிரபாகரன் என பெயர் வைத்தார். அதுமுதல் கேப்டன் என அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.

அவர் ஒரு போராளி, திரையுலக நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது, ஈழத்தமிழர் போரின் போதும் காவிரி விவகாரம் தொடர்பாகவும் திரையுலகினரை ஒன்றுதிரட்டி போராடியவர் கேப்டன் விஜயகாந்த். ஆரம்ப காலத்தில் அவர் பசியோடு போராடியதை போல மற்ற யாரும் பசியோடு இருக்க கூடாது என அனைவருக்கும் பசிபோக்க உணவளித்தவர் கேப்டன் விஜயகாந்த். அவர் இல்லை என நினைக்க மனம் மறுக்கிறது .

ஜெயலலிதா, கலைஞர் என தமிழக அரசியல் ஆளுமைகள் இருந்த போதே கட்சி துவங்கி தனித்து போராடியவர் கேப்டன் விஜயகாந்த். அந்த துணிவு இப்போதுள்ள யாருக்கும் வராது. புதியதாக வாய்ப்பு தேடும் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்க தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியவர் கேப்டன் விஜயகாந்த். அரசியலில் எதிர்க்கட்சி தலைவர் வரை உச்சம் தொட்டவர். மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கிறார்.

விஜயகாந்தை போல ஒரு நடிகர் வேண்டுமானால் மீண்டும் வரலாம். ஆனால் அவரை போல ஒரு மனிதர் மீண்டும் பிறக்கவே முடியாது. அனைவரும் சமம் என்ற கொள்கையை கொண்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் தனது ஆழந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்