தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தின் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் வருகின்ற 31-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை மற்றும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதைப்போல அதற்கு அடுத்த தினங்களான 29,30 ஆகிய தேதிகளில் தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!
டிசம்பர் 31-ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே சமயம், தூத்துக்குடி, திருநெல்வேலி , கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 17,18 ஆகிய தேதிகளில் மேற்கண்ட மாவட்டங்களில் கனமழை பெய்த காரணத்தால் வெள்ளம் ஏற்பட்டது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.