தமிழக வெள்ள பாதிப்பு.! பிரதமர் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை.!
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு கனமழை, பெரு வெள்ளத்தை தமிழக மக்கள் எதிர்கொண்டு உள்ளனர். வட தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டம் மக்கள் மிக்ஜாம் புயல் வெள்ளம் காரணமாக பெருமளவு பாதிக்கப்பட்டனர்.
அதேபோல, தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு அந்த ஆற்றின் கரையோர பகுதி மக்கள் வெள்ள பாதிப்பால் மிகுந்த பெரிதளவில் பாதிக்கப்பட்டனர்.
தூத்துக்குடியில் 22.. நெல்லையில் 13 உயிரிழப்புகள்.. கணக்கெடுப்பு தொடர்கிறது.! – தலைமை செயலாளர்
இந்த இரு வெள்ள பாதிப்புகளில் இருந்தும் மக்கள் இன்னும் முழுதாக வெளிவரவில்லை.வெள்ள நிவாரண பணிகளுக்காக மத்திய அரசிடம் இருந்து பேரிடர் நிவாரண நிதியை தமிழக அரசு கேட்டுள்ளது. அதன் காரணமாக மத்திய குழுக்கள் தமிழகம் வந்து இரு வெள்ள பாதிப்புகளையும் ஆய்வு செய்து தரவுகளை சேகரித்து சென்றனர்.
தற்போது வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து பிரதமர் அலுவலகத்தில் மத்திய குழு இந்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்து உள்ளது. இதனை அடுத்து இன்று பிரதமர் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு பணிகளுக்காக கூடுதல் ஹெலிகாப்டர்கள், பேரிடர் மீட்பு படை வீரர்கள் தேவைப்படுகிறதா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அடுத்து தேவைப்படும் நிவாரண உதவிகள், நிவாரணம் பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.