அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3-வது சம்மன்… அமலாக்கத்துறை அதிரடி..!
டெல்லியில் நடந்த மதுபான ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங், டெல்லி முன்னாள் கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜாமீன் கோரி சஞ்சய் சிங் தாக்கல் செய்த மனு இன்று நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
இதற்கிடையில், தலைநகர் டெல்லியில் நடந்த மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 3-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கு முன்பும் கெஜ்ரிவாலுக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டது.
முன்னதாக, அக்டோபர் மாதத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதல் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இரண்டாவது முறையாக, டிசம்பர் 18 ஆம் தேதி, அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பி டிசம்பர் 21 ஆம் தேதி (அதாவது நேற்று) அவரை விசாரணைக்கு அழைத்தது.
ஆனால் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் பஞ்சாப் புறப்பட்டார். அரியானா மாநிலம் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள மஹிலாவலி அமைந்துள்ள தியான மையத்தில் பயிற்சியில் ஈடுபட இருப்பதாகவும், அங்கு தனது நிகழ்ச்சி 10 நாட்களுக்கு நடைபெற உள்ளதாகவும், அதன்பிறகு டிசம்பர் 30-ம் தேதி டெல்லி வருவதாக அமலாக்கத்துறையிடம் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜனவரி 3, 2024 அன்று நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 3-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.