இன்று தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தூத்துக்குடி, தென்காசி,கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி, ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. இந்த தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நான்கு மாவட்ட மக்களுக்கும் வெளி மாவட்டங்களில் இருந்து நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தூத்துக்குடி, தென்காசி,கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கே.பி.சிங் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட மத்தியக் குழு வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில், இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய வருகிறார். இன்று காலை 10.15 மணிக்கு தூத்துக்குடி செல்லும் இண்டிகோ விமானத்தில் முதல்வர் புறப்பட்டு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு காலை 11.45 மணிக்கு சென்றடைகிறார். பிறகு தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார். இதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு சென்னை திரும்புகிறார்.
டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.12,659 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.