பெலகாவி சம்பவம் – கர்நாடக அரசுக்கு NHRC நோட்டீஸ்..!
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெண் ஒருவரை மின்கம்பத்தில் நிர்வாணப்படுத்தி கட்டி வைத்து தாக்குதல் நடத்தி ஊர்வலமாக கொண்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெண் வீட்டின் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இதனால் இருவரும் சமீபத்தில் வீட்டை விட்டு வெளியேறி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, ஆத்திரம் அடைந்த இளம் பெண்ணின் உறவினர்கள் இளைஞரின் வீட்டிற்கு சென்று அவரின் வீட்டை சேதப்படுத்தியதோடு, இளைஞரின் 42 வயதான தாயை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்று மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக மாநில அரசு விளக்கமளிக்கக் கோரி தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெண் தாக்குதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை விவரம், விசாரணை தற்போது நிலை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கப்பட்ட நிவாரணம், மாநில அரசு எடுத்த நடவடிக்கை ஆகியவை குறித்து கர்நாடக மாநில அரசு 2 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.