காசா போர் நிறுத்தம் தீர்மானம்.! அப்போது புறக்கணிப்பு.! இப்போது இந்தியா ஆதரவு.!
கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். அப்போது இஸ்ரேலை சேர்ந்த 1200 பேர் உயிரிழந்தனர். அந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை நடத்தியது. ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகர் மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தற்போது வரையில் தொடர்ந்து வருகிறது. இதில் காசா நகரில் இதுவரை 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இரு தரப்பில் இருந்தும் பிணை கைதிகள் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.
யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள்… ஹமாஸ் எச்சரிக்கை.! இஸ்ரேல் தாக்குதல்.!
இதற்கிடையில், பல்வேறு நாடுகளின் வலியுறுத்தல்களின் பெயரில், இரு தரப்பும் தாற்காலிமாக ஒரு வாரத்திற்கு போர் நிறுத்தி பிணை கைதிகளை விடுவித்தனர். இதில், 80 இஸ்ரேலிய பணயக்கைதிகள் 240 பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்டனர். காஸாவில் இன்னும் 137 பிணை கைதிகள் இருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது, அதே நேரத்தில் சுமார் 7,000 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இடைக்கால போர் நிறுத்தம் நிறைவு பெற்றவுடன் மீண்டும் இரு தரப்பில் இருந்தும் மீண்டும் போர் ஆரம்பித்தது. இந்நிலையில் காசா நகரில் போர் நிறுத்தம் செய்ய கோரி ஐநாவில் அல்ஜீரியா, பஹ்ரைன், ஈராக், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பாலஸ்தீனம் உட்பட பல நாடுகளால் முன்மொழியப்பட்ட காசா நகர் போர் நிறுத்தம் தீர்மானம் வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த தீர்மானத்தில், நடந்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரை மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக நிறுத்தி இரு தரப்பில் இருந்தும் பிணை கைதிகள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பத்து நாடுகள் எதிராக வாக்களித்தன, 23 நாடுகள் வாக்களிக்கவில்லை. 90 க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகளின் ஆதரவாக வாக்களித்தன.
தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது குறித்து ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருசிரா காம்போஜ் கூறுகையில், ” ஐநா சபையில் தற்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. அக்டோபர் 7 அன்று இஸ்ரேலில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. அப்போது இரு தரப்பில் இருந்தும் பிணைக் கைதிகள் பிடித்து வைக்கப்பட்டனர். அவர்கள் பற்றிய கவலையும், இரு தரப்ப போரினால் பொதுமக்கள் உயிரிழப்பு, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளன இது கவலை அளிக்கிறது. இது சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறிய செயலாகும். இதற்கு அமைதியான மற்றும் நிரந்தர தீர்வு கண்டுபிடிப்பதற்கான முயற்சி தற்போது நடைபெற்றுள்ளது. நீண்டகால பாலஸ்தீன பிரச்சினைக்கும் இது தீர்வாக அமையலாம் என்றும் இந்திய பிரதிநிதி கூறினார்.
முன்னதாக கடந்த அக்டோபர் மாத இறுதியில், ஐநா சபையில், ஜோர்டான் அரசு ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது, மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டுவரக் கோரி, ‘பொதுமக்களை பாதுகாத்தல் மற்றும் சட்ட, மனிதாபிமான கடமைகளை கடைப்பிடித்தல்’ எனும் தலைப்பின் கீழ வரைவுத் தீர்மானம் கொண்டுவந்தது. இந்த தீர்மானத்துக்கான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. 120 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. 14 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியாவுடன் சேர்த்து மொத்தம் 45 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.
அப்போது இந்திய பிரதிநிதி கூறுகையில், பொதுமக்கள் மீதான தீவிரவாத தாக்குதல்கள் கண்டனத்துக்குரியவை. பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் மீது இந்தியா அக்கறை கொண்டுள்ளது. அவர்களை உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்க இந்தியா வலியுறுத்துகிறது. பயங்ரவாதம் வேகமாகப் பரவக் கூடியது. அதற்கு எல்லைகள் இல்லை. தேச பேதங்கள் இல்லை. இனவேறுபாடுகளும் இல்லை.ஆகையால் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உலகம் எந்தவித நியாயங்களையும் கற்பிக்கக் கூடாது. என தெரிவித்து இருந்தது.