எங்கள் வரிப்பணம் தானே..? அவங்க அப்பன் வீட்டு பணத்தையா கேக்குறோம்.? – அமைச்சர் உதயநிதி விளாசல்.!
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது. ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ .6000 , உயிர் சேதம், பொருள்சேதத்திற்கு நிவாரணம் என பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது.
மிதக்கும் எண்ணையை எடுக்க தீவிர முயற்சி… தமிழக அரசு நடவடிக்கை.!
பல்வேறு இடங்களில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்திருந்தார். ஹெலிகாப்டர் மூலம் வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார். அடுத்ததாக மத்திய அரசின் சிறப்பு ஆய்வு குழு வெள்ள பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
நேற்று, சென்னை, சிந்தாதிரிபேட்டையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்பி தயாநிதி மாறன் ஆகியோர் வெள்ள நிவாரண உதவிகளை வழங்கினர். அப்போது, அமைச்சர் உதயநிதியிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதில் மத்திய குழு ஆய்வு செய்தது பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் கூறிய அமைச்சர் உதயநிதி, மத்திய குழு தமிழகம் வந்து வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்கள். தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளது என பாராட்டினார்கள். வெள்ள பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது என கூறினார்கள் என அமைச்சர் பதிலளித்தார்.
அதன் பிறகு, தமிழக அரசு நிவாரண நிதி கேட்டவுடன் கொடுப்பதற்கு இது என்ன ஏடிஎம்- ஆ என மத்திய அமைச்சர் கூறினார் என அமைச்சர் உதயநிதியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய அமைச்சர், நாங்கள் எங்கள் வரிப்பணத்தை தானே கேட்கிறோம்.? அவங்க அப்பன் வீட்டு பணத்தையா கேக்குறோம். மற்ற மாநிலங்களுக்கு மட்டும் கேட்காமல் நிதி கொடுக்கிறார்கள், தமிழகத்தை மட்டும் ஏன் தனியா பாக்குறீங்க. இது தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்துவோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.