அரசு மருத்துவமனையில் இலவச WIFI வசதி…!!
நாகர்கோவில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவ, மாணவிகளின் வசதிக்காக இலவச வைபை வசதி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக விஜயகுமார் எம்.பி. கூறினார். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.43 லட்சம் செலவில் முதியோர்களுக்கான தனி சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது. பழைய கட்டிடத்தை புதுப்பித்து, இந்த சிகிச்சை பிரிவு அமைத்துள்ளனர். இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். புதிய சிகிச்சை பிரிவை விஜயகுமார் எம்பி திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது :ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் எனது தொகுதி நிதியில் இருந்து நவீன வசதிகளுடன் கூடிய கண் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இது தவிர டெலிமெடிசன் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது நோயாளிகளுக்கும், மருத்துவ மாணவர்களுக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த மருத்துவக்கல்லூரியில் மாணவ, மாணவிகள் வசதிக்காக இலவச வைபை வசதி வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று உடனே பணிகளை தொடங்க பி.எஸ்.என்.எல். அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளேன். ெவகு விரைவில் இலவச வைபை வசதி மருத்துவ கல்லூரியில் செயல்படும் என்றார்.
DINASUVADU