இனி ரூ.5 லட்சம் வரை பணப்பரிவர்த்தனை செய்யலாம்.. RBI அதிரடி அறிவிப்பு!
மருத்துவமனை, கல்வி நிலையங்களில் யுபிஐ மூலம் இனி ரூ.5 லட்சம் வரை பணப்பரிவர்த்தனை செய்யலாம் என்று ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் டிசம்பர் மாத நிதிக்கொள்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது.
இதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சக்திகாந்த் தாஸ், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5வது முறையாக மாற்றம் இன்றி 6.5% ஆக தொடரும். நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதால், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் இதே போன்று வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதங்களிலும் மாற்றம் செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
2023-24ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% ஆக அதிகரிக்கும். சர்வதேச அளவில் நீடிக்கும் பதற்றமான சூழல், உலக பொருளாதார மந்தநிலையும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு சவாலாக உள்ளது. சர்வதேச சந்தையில் தேவை குறைந்திருந்தாலும், நாட்டின் ஏற்றுமதி அக்டோபரில் சாதகமாகவே இருந்தது.
மகுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவையில் தீர்மானம் தாக்கல்..!
வங்கிகள் மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்களின் நிதிநிலைமையும் ஆரோக்கியமாக உள்ளது. மற்ற நாடுகளின் பணவீக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், இந்தியாவில் குறைந்து வருகிறது. தொழில்துறையில் சாதகமான சூழல், உட்கட்டமைப்பிற்காக அரசின் செலவினங்களும் வளர்ச்சிக்கு வித்திடுகிறது என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய ஆர்பிஐ கவர்னர், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவதற்கான யுபிஐ கட்டண வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்தார். இது கல்வி மற்றும் சுகாதார நோக்கங்களுக்காக யுபிஐ பரிவர்த்தனையை மேற்கொள்பவர்களுக்கு அதிக அளவில் பணம் செலுத்த உதவும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் கூறியதாவது, மீண்டும் மீண்டும் பணம் செலுத்துவதற்கான இ-ஆணைகள் (e-mandates) வாடிக்கையாளர்களிடையே பிரபலமாகிவிட்டது. இதனால், மியூச்சுவல் பண்ட், காப்பீடு, கிரெடிட் கார்டு பேமெண்ட் ஆகியவற்றுக்கு e-mandate எனப்படும் தானாகவே கணக்கில் இருந்து பரிவர்த்தனை ஆகும் பணத்திற்கான உச்சவரம்பு ரூ.15,000 இருந்து , ஒரு லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.