யார் முதல்வர்? ராஜஸ்தானில் தொடர் இழுபறி… சொகுசு விடுதிகளில் பாஜக எம்எல்ஏக்கள்!
நாட்டில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் பாஜக அமோக வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் கருத்துக்கணிப்பு, யூகங்களுக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்தது. ஏனென்றால், 5 மாநில தேர்தலில் பெரும்பான்மையாக காங்கிரஸ் வெற்றி பெறும் என கூறப்பட்ட நிலையில், அதனை தவிடு பொடியாகியது பாஜக.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சியின் உயர்நிலைக் கூட்டம் கடந்த 5-ம் தேதி பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்றது. இதில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உட்பட பலர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற 3 மாநிலங்களில் யாரை முதல்வர்களாக தேர்வு செய்வது என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இதனால், அம்மாநிலங்களின் முதல்வர்கள் யார் என்பது குறித்து சஸ்பென்ஸும், இழுபறியும் நீடித்து வருகிறது. தெலங்கானாவில் காங்கிரஸ் சார்பில் ரேவந்த் ரெட்டி இன்று முதல்வராக பொறுப்பேற்ற நிலையில், ஆனால், பாஜக சார்பில் இதுவரை முதல்வர் தேர்வு நடக்கவில்லை.
தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டியும், துணை முதல்வராக பாட்டி விக்ரமார்காவும் பதவியேற்றனர்!
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வரை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் சிலர் கட்சியின் மூத்த தலைவர்கள் சார்பாக சொகுசு விடுதிகளின் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஜெய்ப்பூரில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் பாஜகவை சேர்ந்த ஆறு எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு ஆதரவு தெரிவித்து எம்எல்ஏக்கள் அணி சேர்வதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ராஜஸ்தானில் பாஜக புதிய எம்எல்ஏக்கள் பலர், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் மாநில பாஜக தலைவர் சி.பி.ஜோஷி ஆகியோரை சந்தித்து பேசி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், தியா குமாரி மற்றும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஆகியோரும் முதல்வருக்கான போட்டியில் உள்ளனர். இதனால், ராஜஸ்தானில் முதல்வர் யார் என்று முடிவு செய்வதில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது.