மிக்ஜாம் புயல் பாதிப்பு.! தமிழக அரசின் 5060 கோடி ரூபாய் கோரிக்கை.! மத்திய அமைச்சர் தமிழகம் வருகை.!

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல்(Michaung cyclone) சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை வெகுவாக பாதித்துள்ளது. இன்னும் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்ற வருகிறது.

மழைவெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் மக்கள் தங்கள் பகுதிக்கு  மின்சாரம், உணவு உள்ளிட்ட வசதிகள் வேண்டும், மீட்பு பணிகள் விரைவில் நடைபெற வேண்டுமென்றும் வீதிக்கு வந்து அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் ஒவ்வொரு பகுதியாக மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க நிவாரண பணிகள் மேற்கொள்ள நிவாரண நிதியுதவி கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர் செய்ய, சுமார் 5060 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் பாதிப்புகள் பற்றி நேரில் அறிய மத்திய குழு சென்னை வந்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் திமுக அமைச்சர் பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் இன்று சென்னை வர உள்ளார் இன்று தகவல் வெளியாகியுள்ளது. அவர் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட உள்ளார். அவர் உடன் மத்திய குழுவும் தமிழகம் வரவுள்ளது. அவர்கள் வெள்ள பாதிப்பு பகுதிகளை நேரில் ஆய்வு செய்து மத்திய பிரதமர் அலுவலகத்திற்கு தகவல் அனுப்புவர். அதன்பிறகு நிவாரண பணிகளுக்கான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.