அடி, உதை.., 7 மாத சித்திரவதை..! இந்திய மாணவிக்கு அமெரிக்காவில் நேர்ந்த துயரம்.!
கடந்த வருடம் 20 வயதான இந்திய மாணவி ஒருவர் படிப்பிற்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். அங்கு அவரது உறவினரும் இந்திய வம்சாவளியினருமான வெங்கடேஷ் ஆர் சத்தாரு தன் வீட்டில் தங்கவைக்கபட்டுள்ளார். அதன் பிறகு அந்த பெண்ணை கல்லூரிக்கு எங்கும் அனுப்பாமல், கடந்த ஏப்ரல் மாதம் முதல் அந்த இளம்பெண்ணை சத்தாரு வீட்டில் அடைத்து வைத்து சித்தரவதை செய்துள்ளார்.
மேலும் உடன் அவரது நண்பரான ஸ்ரவன் வர்மா பெனுமேட்சா, நிகில் வர்மா பென்மட்சா ஆகியோரும் அந்த பெண்ணை சித்தரவதை செய்துள்ளனர். வீட்டின் அடிமட்டத்தில் உள்ள பாத்ரூம் கூட இல்லாத இடத்தில் தான் அந்த பெண்ணை அடைத்து வைத்துள்ளனர். அதிக நேரம் வீட்டு வேலைகளை செய்ய சொல்லியுள்ளனர். அப்படி செய்ய தவறினால் பிவிசி பைப் கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர்.
கடந்த 7 மாதங்களாக மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்திரவதையை அனுபவித்துள்ளார். இந்திய மாணவி. மேலும் பல சமயங்களில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாகவும் கூறப்படுகிறது. இந்த கொடுமைகளில் இருந்து தப்பிக்க பல முறை முயற்சி செய்தும் அது பலனளிக்கவில்லை என்றும், அது ஒரு கிராம புறம் போன்று இருப்பதால் அதிக வீடுகள் இல்லாததும் ஒரு காரணமாக இருந்துள்ளது.
இறுதியில் அமெரிக்க போலீசாருக்கு போன் செய்ய வாய்ப்பு கிடைத்ததும் உடனடியாக போன் செய்துள்ளார். தகவல் அறிந்து உடனடியாக மிசோரி மாகாணத்தில் செயின்ட் சார்லஸ் கவுண்டி பகுதியில், போலீஸார் வந்தனர். அப்போது அந்த பெண் உடலில் பல்வேறு காயங்களுடன் வெளியே வந்துள்ளார்.
உடனடியாக , 35 வயதான வெங்கடேஷ் ஆர் சத்தாரு , 27 வயதான ஸ்ரவன் வர்மா பெனுமேட்சா , 23 வயதான நிகில் வர்மா பென்மட்சா ஆகியோரை அமெரிக்க போலீசார் கைது செய்தனர். ஆள் கடத்தல், உடல் ரீதியாக துன்புறுத்தல் உள்ளிட்ட பிணையில் வெளியே வராதபடி பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு தற்போது மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஏப்ரல் 2023இல் தொடங்கிய அந்த சித்திரவதையானது சத்தாருவுக்குச் சொந்தமான மூன்று வெவ்வேறு வீடுகளுக்கும் அழைத்து சென்று அடைத்து வைத்து உடல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர் என்றும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ரோல்லாவில் உள்ள மிசோரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்கும் நம்பிக்கையுடன் கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து அந்த மாணவி அமெரிக்காவுக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அந்த மாணவி கடந்த ஏப்ரல் மாதம் சத்தாருவிடம் சிக்கி பல்வேறு போராட்டத்திற்கு பின்னர் தற்போது மீட்கப்பட்டுள்ளார்.