இஸ்ரேல் தாக்குதல்.. அல்-ஷிஃபா மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிரிழப்பு.!
கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கும் மேலாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் நடத்தியத் தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் இன்றுவரை தொடர்ந்து பதிலடி தாக்குதல் நடத்திவருகிறது.
இஸ்ரேல் வான்வழி தாக்குதல் மட்டுமே நடத்திவந்ததைத் தொடர்ந்து, ராணுவத்தின் நஹாஸ் காலாட்படை பிரிவினர் காஸாவில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தினர். இதனால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வடக்கு காசா பகுதியில் இருந்து வெளியேறினர். இந்த போருக்கு மத்தியில், ஹமாஸ் பயங்கரவாதக் குழு 200க்கும் மேற்பட்ட பணயக் கைதிகளை சிறைபிடித்தனர்.
காசா மருத்துவமனையின் கீழ் ஹமாஸின் ரகசிய தளம்.! வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல்.!
இதனால் பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை, காசா நகரத்திற்கு மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிபொருள் எதுவும் வழங்கப்படாது என்றும் இஸ்ரேல் தரப்பில் அறிவிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் காசாவில் இருக்கக்கூடிய மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் இறந்துள்ளனர்.
அதன்படி, மின்வெட்டு காரணமாகவும், எரிபொருள் பற்றாக்குறைக் காரணமாகவும் மருத்துவமனையில், முக்கிய மருத்துவ உபகரணங்கள் செயல்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த 48 மணி நேரத்தில் மருத்துவமனையில் 24 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாகவும், இதில் 22 பேர் ஒரே இரவில் இறந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசாவில் பிணைக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பேச்சுவார்த்தை.!
மேலும், நவம்பர் 11ஆம் தேதி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நான்கு குறைமாத குழந்தைகள் உட்பட 40 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக அல்-ஷிஃபா மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தற்போது, தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் நகரின் மீது இஸ்ரேல் குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலால் 26 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்றும் உள்ளூர் ஊடகங்கள் (வஃபா) தெரிவிக்கின்றன. காசா சுகாதார அமைச்சகத்தின் படி, காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 12,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.