சிலரின் தூண்டுதலால் தவறான பரப்புரை… அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

Minister AV Velu

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ‘செய்யாறு சிப்காட் 3-வது அலகு’ விரிவாக்கத் திட்டத்துக்காக மேல்மா உட்பட 11 ஊராட்சிகளில் சுமார் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கைப்பற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. விளை நிலங்கள் சட்டத்துக்கு முரணான வகையில் பறிக்கப்படுவதாக குற்றம்சாட்டி பல்வேறு கிராம விவசாயிகள் ஒன்றுகூடி தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது, சிப்காட் விரிவாக்கத் திட்டத்தையே கைவிட வேண்டும் என வலியுறுத்தி மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் கடந்த ஜூலை 2-ம் தேதி முதல் 124 நாட்களுக்கு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மேலும், எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2-ம் தேதி காவல் துறையினர் தடையை மீறி விவசாயிகள் தங்கள் அடையாள ஆவணங்களை வருவாய்க் கோட்டாட்சியரிடம் ஒப்படைப்பதற்காக ஊர்வலமாக சென்றனர்.

அப்போது ஊர்வலத்தை தடுத்த போலீஸார், விவசாயிகளைக் கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு, அன்று மாலையே விடுவிக்கப்பட்டனர். ஆனால், விவசாயிகள் மண்டபத்தைவிட்டு வெளியேற மறுத்து உள்ளிருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது 11 பிரிவுகளின் கீழ் செய்யாறு போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.

சங்கரய்யாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுமா? மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பதில்!

இதையடுத்து, போராட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் உட்பட 22 பேர் கடந்த 4ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் 7 பேர் மீது நேற்று குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. விளை நிலங்களை கையகப்படுவதற்கும், விவசாயிகள் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை எடுத்ததற்கு கடும் எதிர்ப்பும், கண்டங்களையும் அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருவண்ணாமலையில் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், தொழிற்சாலை வருவதால் வேலைவாய்ப்பு கிடைக்கும். செய்யாறு சிப்காட்டிற்கு 55 தொழிற்சாலைகள் வரவுள்ளன. பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டே சிப்காட் அமைக்கப்படுகிறது. சிலரின் தூண்டுதலின் பேரில் தவறாக பரப்புரை செய்யப்படுகிறது.

கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இருமடங்கு விலை வழங்கப்படுகிறது. சிப்காட் விவகாரத்தில் விவசாயிகள் மீது குண்டாஸ் போடப்பட்டதை பத்திரிகையில் படித்தும், தொகுதி MLA சொல்லி தான் அறிந்துகொண்டேன். அரசாங்கம் எந்த பணியையும் செய்ய கூடாது என திட்டமிட்டு போராட்டம் நடைபெறுகிறது. தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டால் தான் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க முடியும். கிருஷ்ணகிரியை சேர்ந்த அருள் தான் போராட்டத்தை தூண்டுகிறார். விவசாயிகளை வஞ்சிப்பதோ, ஏமாற்றுவதோ இந்த அரசின் நோக்கம் அல்ல என விளக்கமளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்