ஒடிசாவை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.! தமிழகத்திற்கான மழை நிலவரம்.!
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று முன்தினம் (நவம்பர் 14) உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது நேற்று (நவம்பர் 15) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
வங்க கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தென்கிழக்கு பகுதியில் இருந்து வடகிழக்கு நோக்கி நகரும். இதன் காரணமாக ஒடிசா மாநிலத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் நிலை உருவாகியுள்ளது.
கடல் சீற்றம்: 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நாளை 17ஆம் தேதி ஓடிசா கடற்கரை பகுதியில் கரையை கடக்க உள்ளது. கரையை கடந்த பின்னரும் தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 19ஆம் தேதி வரையில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
அதனை தொடர்ந்து அடுத்ததாக 20 மற்றும் 21 ஆம் தேதிகளிலும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் அதன் பிறகு மழை அளவு படிப்படியாக குறையவும் எனவும் தென்மண்டல வானிலை இயக்க தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மாண்டலம் உருவாகியுள்ளதால் எண்ணூர், தூத்துக்குடி , நாகப்பட்டினம் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.