சரித்திர நாயகன்: ஒரே நாள், ஒரே ஆட்டம்.. 2 உலக சாதனைகளை நிகழ்த்திய விராட் கோலி!

Virat Kohli

நடப்பாண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று தற்போது அரையிறுதி போட்டி தொடங்கியுள்ளது. இந்தியா, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகளும் உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.

குறிப்பாக இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு ஒரு லீக் போட்டில் கூட தோற்காமல் அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்தது. அதிலும், இந்திய அணி நட்சத்திர வீரர்கள் ரோஹித் ஷர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் முன்னாள் ஜாம்பவான்களின் சாதனைகளை தவுடு பொடியாக்கி வருகின்றனர்.

முதலாவது அரையிறுதி போட்டி:

இந்த சூழலில் ஒருநாள் உலககோப்பையின் முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. ஆரம்பமே கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, சுப்மன் கில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

கோலி அரை சதம்:

பின்னர், ரோஹித் ஷர்மா 47 ரங்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சிறப்பாக விளையாடி வந்த சுப்மன் கில் (79* ரன்கள்) திடீரென காலில் ஏற்பட்ட வலி காரணமாக Retired Hurt ஆகி பெவிலியன் திரும்பினார். இதையடுத்து, விராட் கோலி, ஸ்ரேயாஷ் அய்யர் ஆகியோர் சிறப்பாக விளையாடி வந்தனர். இதில், விராட் கோலி தனது 72வது அரை சதத்தை அடித்து சாதனை படைத்தார்.

சச்சினின் சாதனை முறியடிப்பு:

அதாவது, கடந்த சில போட்டிக்களில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை சமன் செய்து வரும் விராட் கோலி, இந்த அரையிறுதிப் போட்டியில் 673 ரன்களைக் கடந்து, ஒரு உலக கோப்பை சீசனில் அதிக ரன்கள் விளாசிய சச்சினின் சாதனையை முறியடித்தார். 2003 உலகக்கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் எடுத்த 673 ரன்களே அதிகபட்சமாக இருந்த நிலையில், இதனை முறியடித்துள்ளார் விராட். தற்போது 600 ரன்களைக் கடந்து ஐசிசி உலகக் கோப்பையில் 600 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் பேட்டராக விராட் கோலி ஆனார்.

50-ஆவது சதம்:

இந்த நிலையில், சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50-ஆவது சதம் அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். 106 பந்துகளில் 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் விளாசி, தனது 50-ஆவது சதத்தை பூர்த்தி செய்தார் விராட் கோலி.  நடப்பாண்டு உலகக்கோப்பையை வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்திருந்த நிலையில், இன்று நியூசிலாந்துக்கு எதிராக மூன்றாவது சதம் அடித்து அசத்தினார்.

ஒட்டுமொத்த சதங்கள்:

அதுமட்டுமில்லாமல், ஒருநாள் போட்டிகளில் 49 சதம் அடித்து சச்சினின் சாதனையை சமன் செய்திருந்த நிலையில், இன்று 50-ஆவது சதம் அடித்து அதையும் முறியடித்தார் விராட். ஒட்டுமொத்தமாக விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் 29, ஒருநாள் போட்டிகளில் 50, டி20 போட்டிகளில் 1 என மொத்தம் 80 சதங்களை அடித்துள்ளார்.

ஒரே நாளில் 2 உலக சாதனைகள்:

இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 50ஆவது சதம், உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்தது என்ற சச்சினின் 2 சாதனைகளை ஒரே போட்டியில் முறியடித்து அசத்தியுள்ளார் கிங் கோலி. எனவே, ஒரே நாள், ஒரே ஆட்டத்தில் 2 உலக சாதனைகளை படைத்துள்ளார் விராட் கோலி. இந்த சாதனைகளை தொடர்ந்து இறுதியாக 113 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து விராட் கோலி விக்கெட்டை இழந்தார். இதில் சிறப்பு என்னவென்றால் சச்சினின் கோட்டையில் அவரது சாதனையை முறியடித்து சரித்திர நாயகனாக திகழ்கிறார் விராட் கோலி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்