உலகக்கோப்பை அதிரடிகள்.. சச்சினின் சாதனையை முறியடித்தார் ‘கிங்’ கோலி.!
ஒருநாள் உலக கோப்பைக் கிரிக்கெட் தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டியானது, மும்பை வான்கடே மைதானத்தில் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, நியூசிலாந்து அணி வீசும் பந்துகளை பதம் பார்த்து வருகிறது.
முதலில் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கி அணிக்கு நல்லத்தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். ரோஹித் சர்மா பவர் பிளேவில் அதிரடியாக விளையாடி, 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளை பறக்கவிட்டார். இதையடுத்து, 8.2-வது ஓவரில் டிம் சவுத்தி வீசிய பந்தில், வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்த பிறகு, நட்சத்திர வீரர் விராட் கோலி களமிறங்கி விளையாடி வருகிறார். இதில் 7 ரன்கள் எடுத்தால் ஒரே ஒருநாள் போட்டியில் 600 ரன்களை கடந்த மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைக்க இருந்த நிலையில், தற்போது 600 ரன்களைக் கடந்து ஐசிசி உலகக் கோப்பையில் 600 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் பேட்டராக விராட் கோலி ஆனார்.
அதேபோல, கடந்த சில போட்டிக்களில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை சமன் செய்து வரும் விராட் கோலி, இந்த அரையிறுதிப் போட்டியில் 673 ரன்களைக் கடந்து, ஒரு உலக கோப்பை சீசனில் அதிக ரன்கள் விளாசிய சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.
கடந்த 2003ம் இந்த சாதனையை முதன்முதலில் சச்சின் டெண்டுல்கர் செய்தார். அப்பொழுது ச்சின் டெண்டுல்கர் 673 ரன்கள் எடுத்தார். 2019 உலகக் கோப்பையில் 648 ரன்களுடன் ரோஹித் சர்மா இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இப்போது இருவரையும் பின்னுக்குத்தள்ளி விராட் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
முன்னதாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 37-வது லீக் ஆட்டத்தில் 119 பந்துகளில் 100 ரன்களை எட்டி, தனது 49வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை விராட் கோலி சமன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.