தோழர் சங்கரய்யா மறைவு.! அரசியல் தலைவர்கள் இரங்கல்.!

Comrade Sankaraiah

சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் சங்கரய்யா உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் : 

அவரது இறப்பு செய்தி அறிந்ததும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து தோழர் சங்கரய்யா உடலுக்கு தனது இறுதி மரியாதையை செலுத்தினார். அதன் பிறகு வெளியிட்ட அரசு அறிக்கையில், தோழர் சங்கரய்யா இழப்பு தனிப்பட்ட உறையில் தனக்கு மிகுந்த மனவேதனை அளித்தததாகவும், அவரது இறுதி ஊர்வலம் அரசு மரியாதையுடன் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி : 

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், ” நூற்றாண்டு கண்ட சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் 15வது மாநிலச் செயலாளராகவும், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவருமான திரு.சங்கரய்யா அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

அவரது குடும்பத்தினருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தன்வாழ்நாளின் பெரும் பகுதியை மக்கள் சேவையிலும், பாட்டாளிகளின் மேம்பாட்டிற்காகவும் அர்ப்பணித்த வீரத்தியாகி திரு.சங்கரய்யா அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். ” என பதிவிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் : 

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  தொல்.திருமாவளவன் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், ” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் என். சங்கரய்யா அவர்கள் மறைவு தமிழ்நாட்டுக்குப் பேரிழப்பாகும். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது செம்மாந்த வீர வணக்கத்தைச் செலுத்துகிறோம்.

மக்களுக்காகப் போராடிய மாபெரும் ஆளுமை தோழர் என்.சங்கரய்யா. அவரை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யவும் அவரது நினைவாக மணிமண்டபம் அமைத்திடவும் வேண்டுகிறோம். தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை முன்வைக்கிறோம்.” எனவும் அதில் பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலை : 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், ” முதுபெரும் அரசியல் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவருமான திரு.சங்கரய்யா அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன். மூத்த தலைவரான திரு. சங்கரய்யா அவர்களது மறைவு, தமிழக அரசியலுக்கு பேரிழப்பு. திரு.சங்கரய்யா அவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

எல்.முருகன் :

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “ தான் கொண்ட கொள்கையில் இறுதி மூச்சு வரை போராடியவர், சுதந்திர போராட்ட தியாகி ஐயா சங்கரய்யா அவர்களின் மறைவு வருத்தத்தை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் மற்றும் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

டி.டி.வி.தினகரன் : 

அமமுக தலைவர் டிடிவி.தினகரன் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், ” சுதந்திர போராட்ட வீரரும், இடது சாரி இயக்கத்தின் அடையாளமுமான தோழர் என்.சங்கரய்யா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இடதுசாரி தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய சுதந்திர போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம், அடித்தட்டு மக்களுக்கான போராட்டம், விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் என தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை சிறையிலேயே கழித்த அப்பழுக்கற்ற பொதுவாழ்வின் தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்களின் இழப்பு கம்யூனிஸ்ட் இயக்கம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்குமான பேரிழப்பாகும்.

80 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் மாணவராக, கட்சித் தலைவராக, மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக, விவசாய சங்க தலைவராக தன் இறுதிக்காலம் வரை சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிய தோழர் என்.சங்கரய்யா அவர்கள் ஆற்றிய மக்கள் பணிகளும், மகத்தான தியாகமும் என்றென்றும் இவ்வுலகில் நிலைத்து நிற்கும்.” என பதிவிட்டுள்ளார் .

சீமான் : 

நாம் தமிழகர் கட்சி தலைவர் சீமான் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் , விடுதலைப்போராட்ட வீரரும், முதுபெரும் கம்யூனிச தலைவருமான சங்கரய்யா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். மாணவப் பருவத்திலேயே தாயக விடுதலைக்காக சிறைசென்று பற்பல கொடும் துன்பங்களைத் தாங்கிய ஐயா அவர்களின் ஈடு இணையற்ற ஈகம் மிகுந்த போற்றுதலுக்குரியது.

ஐயா அவர்களின் இழப்பென்பது தூய அரசியலை நேசித்து நிற்கும் எங்களைப் போன்ற பிள்ளைகளுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். ஈடுசெய்ய முடியாத இழப்பில் தவிக்கும் ஐயா சங்கரய்யா அவர்களின் மகனிடம் அலைபேசி மூலம் தொடர்புகொண்டு குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரினைப் பகிர்ந்து கொண்டேன்.

கமல்ஹாசன் :

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் , ” நூறாண்டு தாண்டிய தன் வாழ்வில், நினைவு தெரிந்த பருவம் முதல் ஒரு நாளையும், ஒரு நொடியையும் தனக்கென வாழாத் தகைமையைக் கைக்கொண்ட முதுபெரும் தோழர் என்.சங்கரய்யா நம்மை நீங்கினார். சுதந்திர வேட்கையிலும் அதன் பிறகு பொதுவுடைமைக் கொள்கையிலும் ஆழ்ந்திருந்த தோழர், ஒவ்வொரு நாளையும் எளிய மக்களின் நலனுக்காகவே செலவிட்டார். அவரைப் பிரிந்ததில் வருந்துவது இடதுசாரி இயக்கங்கள் மாத்திரமல்ல, நாகரிக அரசியல் விரும்பும் அத்தனை இயக்கங்களும்தான். பெரும்பான்மையாய் வாழும் பாட்டாளி வர்க்கத்தினரின் துயர நாள் இது. அவர் ஏந்திய பதாகையை நாமும் நம் நெஞ்சில் ஏந்த வேண்டும். மறைந்த தோழருக்கு என் மனம் கலங்கிய அஞ்சலி. ” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi