தொடரும் கனமழை..அடுத்த 3 மணிநேரத்திற்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!
தென்தமிழக மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும் மற்றும் வடதமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுச்சேரியிலும் கடந்த சில நாட்களாக மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழைப் பெய்து வருகிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதி
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 14ம் தேதி உருவாக உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதோடு கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (11.11.2023) முதல் 17ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் மழை
இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிதமான இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மழைப் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.