பேட்டிங்கில் மிரட்டிய பங்களாதேஷ்..ஹ்ரிடோய் அரைசதம்.! ஆஸ்திரேலியாவுக்கு 307 ரன்கள் இலக்கு.!
AUSvsBAN: நடப்பு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இன்று 43வது லீக் போட்டியானது நடந்து வருகிறது. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிற இந்த போட்டியில், அரையிறுதிக்குத் தகுதிப்பெற்ற ஆஸ்திரேலியா, தொடரில் இருந்து வெளியேறிய பங்களாதேஷ் அணியுடன் மோதி வருகிறது.
இப்போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய பங்களாதேஷ் அணியில், முதலில் தன்சித் ஹசன், லிட்டன் தாஸ் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி அணிக்கு நல்லத்தொடக்கத்தை அமைத்துக்கொடுத்தனர்.
பின் 36 ரன்களை எடுத்த தன்சித் ஹசன், அபோட் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். நஜ்முல் ஹொசைன் சாண்டோ களமிறங்கி பொறுப்பாக விளையாட, லிட்டன் தாஸும் 36 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து, டவ்ஹித் ஹ்ரிடோய் விளையாட ஹொசைன் சாண்டோ அரைசதத்தைத் தவறவிட்டு, 45 ரன்களில் ரன்அவுட் ஆனார்.
அதன்பிறகு மஹ்முதுல்லா, முஷ்பிகுர் ரஹீம் களமிறங்கி ஓரளவு ரன்கள் எடுத்து வெளியேற, நிதானமாக விளையாடிய டவ்ஹித் ஹ்ரிடோய் அரைசதம் அடித்து அசத்தினார். மெஹிதி ஹசன் மிராஸ் களமிறங்கி, டவ்ஹித் ஹ்ரிடோயுடன் இணைந்து விளையாட, ஹ்ரிடோய் வெளியேறினார். இவரையடுத்து களமிறங்கிய வீரர்கள் சரியாக சோபிக்காத நிலையில் 50 ஓவர்கள் முடிந்தது.
முடிவில், பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக டவ்ஹித் ஹ்ரிடோய் 74 ரன்களும், ஹொசைன் சாண்டோ 45 ரன்களும், தன்சித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் தலா 36 ரன்களும் எடுத்துள்ளார்கள். ஆஸ்திரேலியா அணியில் சீன் அபோட், ஆடம் ஜம்பா இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
தற்போது 307 ரன்கள் எடுத்தால் வெற்றியை என்ற இலக்கில், ஆஸ்திரேலியா அணி களமிறங்கியுள்ளது. இதில் டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர்.