உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய ஆப்கானிஸ்தான்..!
நடப்பு சீசனில் ஆப்கானிஸ்தான் உலகக்கோப்பையில் அதிக எதிர்பார்ப்புடன் நுழைந்தது. முதல் 2 போட்டிகளில் தோல்வியை தழுவியது. ஆனால் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் ஜொனாதன் ட்ராட்டின் பயிற்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் அணி சில வெற்றிகளுடன் அணி மீண்டு வந்தது.
ஆப்கானிஸ்தானின் எழுச்சி இங்கிலாந்துக்கு எதிராக 69 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சியூட்டும் வெற்றியுடன் தொடங்கியது. ஆனால் அடுத்த போட்டியில் கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் ரன்னர்-அப் அணியான நியூசிலாந்திற்கு எதிராக 179 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும், பாகிஸ்தான் எதிராக (8 விக்கெட் வித்தியாசத்தில்) , இலங்கை அணிக்கு எதிராக (ஏழு விக்கெட்டுகள்) மற்றும் நெதர்லாந்து அணிக்கு எதிராக (7 விக்கெட் வித்தியாசத்தில்) ஹாட்ரிக் வெற்றிகளுடன் அணி மீண்டும் எழுச்சி பெற்றது.
இதற்கிடையில் கடந்த 7-ஆம் தேதி ஐந்து முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் வெற்றி பெற நெருங்கி வந்தது. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 91/7 என்ற நிலையில் தள்ளாடியது. ஆனால் கிளென் மேக்ஸ்வெல் 33 ரன்களில் இருந்தபோது முஜீப் உர் ரஹ்மான் மேக்ஸ்வெல் கேட்ச் தவற விட பின்னர் அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 21 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 201 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் ஆஸ்திரேலியா மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு 3-வது அணியாக தகுதி பெற்றது. இதனால் ஆப்கானிஸ்தான் எட்டு புள்ளிகளில் சிக்கித் தவித்து அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை சற்று இழந்தது. இந்நிலையில் அரையிறுதிக்கு 4-வது இடத்திற்கு ஆப்கானிஸ்தான் அணி செல்ல வேண்டும் என்றால் இன்றைய போட்டியில் 438 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
அதிலும் தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தால் ஆப்கானிஸ்தான் அப்போதே வெளியேற்றப்படும் என்ற நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்ந்தெடுத்தது. தொடக்க வீரர்களாக இப்ராஹிம் சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ் களமிறங்கினர். முந்தைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த இப்ராஹிம் சத்ரான் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகியோர் பார்ட்னர்ஷிப் மூலம் 41 ரன் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.
ஆனால் பின்னர் அடுத்தடுத்த ஓவர்களில் இறங்கிய அனைத்து வீரர்களும் நிலைத்து நிற்காமல் வெளியேற மத்தியில் இறங்கிய அஸ்மத்துல்லா ஓமர்சாய் மட்டும் 97 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டை இழந்து 244 ரன்கள் எடுத்தனர். இருப்பினும், போட்டி முடிவதற்கு முன்பே ஆப்கானிஸ்தான் அணி வெளியேறியது.