ரஜினிக்கு சொன்ன அந்த கதையில் தான் சிம்பு நடிக்கிறார்! உண்மையை உடைத்த தேசிங் பெரியசாமி!
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தேசிங் பெரியசாமி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து கதை ஒன்றையும் கூறியிருந்தார். அந்த கதை ரஜினிக்கும் பிடித்து போக படத்தில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்துவிட்டார். ஆனால், சில காரணங்களால் அந்த படம் அப்படியே நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, தேசிங் பெரியசாமி அடுத்ததாக சிம்புவை சந்தித்து கதை ஒன்றை கூறி அவருக்கும் அந்த கதை பிடித்துப்போக அவருடைய இயக்கத்தில் தன்னுடைய 48-வது படத்தில் சிம்பு நடித்து வருகிறார். தற்காலிகமாக ‘STR48’ என்று இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் தன்னுடைய ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவிருக்கும் நிலையில், இந்த படத்தின் கதை ரஜினிக்கு சொன்ன கதையா என்ற கேள்விக்கு தேசிங் பெரியசாமி சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்து இருக்கிறார். இது குறித்து பேசிய தேசிங் பெரியசாமி ” ரஜினிக்கு சொன்ன கதையில் தான் சிம்பு நடிக்கிறார். அவருக்கு சொன்ன கதை என்னவோ அதை தான் நான் சிம்புவிடம் சொன்னேன்.
அவருக்கும் இந்த கதை மிகவும் பிடித்துவிட்டது. மற்றபடி, படத்தில் சிம்புவுக்காக கதையில் சில மாற்றங்கள் எல்லாம் செய்யவே இல்லை. இந்த கதையின் முதல் பாதியை நான் கூறியவுடன் சிம்பு சாருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அடுத்ததாக அதனுடைய இரண்டாவது பகுதியை சொல்வதற்கே பல மணி நேரங்கள் ஆனது. அந்த அளவிற்கு படத்தின் முதல் பகுதியை பற்றி மட்டுமே பேசி கொண்டு இருந்தோம்.
இந்த படத்தின் கதை கூறுவதற்கு முன்பே நடிகர் சிம்புவை எனக்கு நன்றாகவே தெரியும். கண்ணும் கொள்ளையடித்தால் படம் சமயத்திலேயே தெரியும். படம் வெளியான பிறகு படத்தை பார்த்துவிட்டு என்னிடம் 30 நிமிடம் பேசினார். அவருக்கு அந்த படமும் அவருக்கு பிடித்திருந்தது” எனவும் தேசிங் பெரியசாமி கூறியுள்ளார்.