12 மாவட்டங்களில் இன்று கனமழை.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில வாரங்களாக பொழிய ஆரம்பித்து பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கனமழையானது பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
சென்னை, திண்டுக்கல், ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி என 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த 3 மணிநேரத்திற்கு காவிரி டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும், நெல்லை , தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த 3 மணிநேரத்திற்கு மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டத்தின் மலைநிலவரத்தை கருத்தில் கொண்டு விடுமுறை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.