Eletre SUV: இந்தியாவில் களமிறங்கியது லோட்டஸ் எலெட்ரே எஸ்யுவி.! விலையை கேட்டா மிரண்டுருவீங்க..!
Eletre SUV: 1940-களில் இருந்து ஸ்போர்ட்ஸ் கார்களை தயாரித்து வரும் லோட்டஸ் (Lotus) எனும் பிரிட்டிஷ் நிறுவனம், அதன் புதிய கார்களை நவம்பர் 9ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று சொகுசு எலக்ட்ரிக் எஸ்யூவியான எலெட்ரே-வை அறிமுகப்படுத்தியுள்ளது.
பெட்ரோலில் இயங்கும் எமிரா ஸ்போர்ட்ஸ் கார் மற்றும் எலக்ட்ரிக் எலெட்ரே எஸ்யூவி, ஆகிய இரண்டையும் அறிமுகப்படுத்தும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், எலெட்ரே எஸ்யூவியை மட்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் லோட்டஸ் நிறுவனத்தின் முதல் கார் இதுவாகும்.
இந்த காரின் விற்பனை மற்றும் சேவையை கையாள புதுடெல்லியில் உள்ள மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டெல்லியில் முதல் ஷோரூம் திறக்கப்படும். அடுத்தடுத்த ஆண்டுகளில் நாடு முழுவதும் அதிகமான ஷோரூம்கள் திறக்கப்படும்.
எக்ஸ்டீரியர் டிசைன்
லோட்டஸ் எலெட்ரே எலக்ட்ரிக் எஸ்யூவி ஆனது ஒரு பிரீமியம் ஸ்போர்ட்டி வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது நேர்த்தியான எல்-வடிவ ஹெட்லைட்களுடன் வருகிறது. பின்புறத்தில் ஒரு தொடர்ச்சியான எல்இடி லைட் பாரும், ஏர் சேனலிங்கிற்காக பேனட்டில் இரண்டு வென்ட்களும் உள்ளது. இதில் 22-இன்ச், 10-ஸ்போக் ஃபோர்ஜ் சக்கரம் உள்ளது. இந்த கார் 47 சதவீதம் எஃகு மற்றும் 43 சதவீதம் அலுமினியத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
இன்டீரியர் டிசைன்
எலெட்ரேவின் உட்புறத்தில் சிறப்பம்சமாக, ஸ்போர்ட்டி ஸ்டீயரிங் வீல் மற்றும் 15.1 இன்ச் சர்பேஸ் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இந்த டிஸ்பிளே தேவையில்லாத நேரத்தில் மடித்து வைக்கும் வகையிலும் உள்ளது. இதில் லோட்டஸ் ஹைப்பர் ஓஎஸ் ஆனது இயக்கத்தில் உள்ளது.
மேலும், 12-வே அட்ஜஸ்டபிள் பிரென்ட் சீட், 5-ஸ்பீக்கர் டால்பி அட்மோஸ் சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் நான்கு லிடார் சென்சார்கள் மற்றும் ஏழு எச்டி கேமராக்கள் அடங்கிய தொகுப்பு உள்ளது. டேஷ்போர்டிலும் ஒரு கேமரா உள்ளது. இதில் இருக்கக்கூடிய தரைவிரிப்புகள் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய மனிதனால் உருவாக்கப்பட்ட ஃபைபரால் ஆனது.
பவர்டிரெய்ன் மற்றும் பேட்டரி
எலெட்ரே இரண்டு பவர்டிரெய்ன் விருப்பங்களுடன் கிடைக்கிறது. அதன்படி, பேசிக் மற்றும் எலெட்ரே எஸ் மாடல் 597 BHP (ஹார்ஸ் பவர்) மற்றும் 710 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் ஒற்றை-மோட்டார் அமைப்புடன் வருகின்றன. இது அதிகபட்சமாக 600 கிமீ தூரம் வரை செல்லும். இது 4.5 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும்.
அதே போல, எலெட்ரே ஆர் 896 BHP (ஹார்ஸ் பவர்) மற்றும் 985 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் இரட்டை மோட்டார்கள் அமைப்புடன் கூடிய 2-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் வருகின்றன. அதிகபட்சமாக 490 கிமீ தூரம் வரை செல்லும். இது 2.95 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும்.
இந்த மூன்று மாடல்களும் 112 கிலோ வாட் திறன் கொண்ட பேட்டரி மூலம் இயக்கப்படுகின்றன. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 22 கிலோ வாட் ஏசி சார்ஜ்ர் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி 20 நிமிடங்களில் 10-80 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும்.
விலை
இந்த கார் எலெட்ரே, எலெட்ரே எஸ் மற்றும் எலெட்ரே ஆர் என்கிற மூன்று மாடல்களில் உள்ளது. எலெட்ரே பேசிக் மாடல் ரூ.2.55 கோடி என்கிற எக்ஸ்ஷோரூம் விலையிலும், எலெட்ரே எஸ் ரூ.2.75 கோடி என்கிற எக்ஸ்ஷோரூம் விலையிலும், எலெட்ரே ஆர் மாடல் ரூ.2.99 கோடி என்கிற எக்ஸ்ஷோரூம் விலையிலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.