பெங்களூருவில் அரசு பெண் அதிகாரி கத்தியால் குத்தி படுகொலை..!
கர்நாடகாவில் நேற்று 37 வயதான மூத்த பெண் அரசு அதிகாரி ஒருவர் அவரது இல்லத்தில் தொண்டை அறுபட்டு கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். உயிரிழந்த பிரதிமா கர்நாடக அரசின் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றினார். இவர் சுப்பிரமணியம்புரா பகுதியில் வசித்து வந்தார். இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் இன்று காலை 8.30 மணியளவில் போலீசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
காவல்துறையின் அறிக்கையின்படி, இந்த கொலை நன்கு திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. நேற்று மாலை 6 மணி வரை அலுவலகத்தில் இருந்த பிரதிமா இரவு 8 மணிக்கு வீடு திரும்பியதாக போலீசார் தெரிவித்தனர். கார் டிரைவர் அவரை வீட்டில் இறக்கிவிட்டு சென்றுள்ளார். சநேற்று இரவு 8 மணிக்கும், இன்று காலை 8 மணிக்கும் இடையில் தான் இந்த கொலை நடந்திருக்க வேண்டும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவம் நடைபெற்ற போது பெண் அதிகாரியின் கணவர் வீட்டில் இல்லை. இவர் சிவமோகா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளியில் இருந்துள்ளார். வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் பெண் அதிகாரியை கத்தியால் குத்தி கொன்றனர். இந்த கொலையில் சட்டவிரோத சுரங்கத்தொழில் ஈடுபடுபவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வீட்டில் இருந்து பெரும் மதிப்பிலான பொருட்கள் எதுவும் திருடப்படவில்லை என கூறப்படுகிறது.
பிரதிமா கடந்த 8 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவரது வீட்டில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை. பிரதிமாவின் வீட்டுப் பணிப்பெண், அவரது ஓட்டுநர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஆகியோரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.