தொடர் வெற்றியை தக்க வைக்குமா இந்தியா.? தென்னாப்பிரிக்கா அணியுடன் இன்று பலப்பரீச்சை.!
IND vs SA: இந்த ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் ஆனது விறுவிறுப்பாக நடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 45 லீக் போட்டிகளில் இதுவரை 36 ஆட்டங்கள் முடிந்த நிலையில், இன்று 37-ஆவது லீக் போட்டி நடைபெறுகிறது.
இந்த போட்டியில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில், நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஒருமுறை கூடத் தோல்வியை சந்திக்காத இந்தியா மற்றும் ஒரு முறை மட்டுமே தோல்வியை சந்தித்த தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு பலம் வாய்ந்த அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன.
இந்த இரண்டு அணிகளும் ஏற்கனவே அரையிறுதி சுற்றிற்குத் தகுதி பெற்றுள்ள நிலையில் இன்று நடைபெறுகிற லீக் போட்டியிலும் மோதுகிறது. இரண்டு முறை சாம்பியனான இந்தியா ஒரு போட்டியில் கூட இதுவரை தோல்வி அடையாமல் 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
தென்னாப்பிரிக்கா அணி ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து 12 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே இன்று நடைபெறுகிற போட்டியானது மிகவும் பரபரப்பாக இருக்கும். இதுவரை இந்த இரண்டு அணிகளும் 90 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது.
இதில் அதிகபட்சமாக தென்னாபிரிக்கா அணியே 50 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி 37 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் மூன்று போட்டிகளில் முடிவுகள் இல்லாமலேயே முடிவடைந்து உள்ளது. ஆனால் குறிப்பிடத்தக்க வகையில் இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற கடைசி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
ஆனால் இந்திய அணியில் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா, கணுக்காலில் ஏற்பட்டக் காயம் காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அணியில் பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா தற்போது அணியில் இல்லாத காரணத்தினால் கே.எல்.ராகுல் துணை கேப்டனாக உள்ளார்.
மேலும், இந்தியா வீரர்கள் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறந்த ஃபார்மில் இருக்கின்றனர். எனவே இதுவரை விளையாடிய போட்டிகள் போலவே இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று எட்டாவது வெற்றியை பதிவு செய்யும் என்பதில் சந்தேகமில்லை. இந்த போட்டியானது இன்று மாலை 2:00 மணி அளவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது