இங்கிலாந்தை வீழ்த்தி 33 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி..!

2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் இன்று நடைபெறும் 36 ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகள், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக  டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர் களமிறங்கினர்கள். ஆட்டம் தொடங்கிய 2-வது ஓவரில் டிராவிஸ் ஹெட் 11 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து ஸ்மித் களமிறங்கினர். மறுபுறம் விளையாடிய வார்னர் 15 ரன் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை  உயர்த்தினர்.

இதில் ஸ்மித் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 44 ரன்களுடன் வெளியேறினார். அடுத்து வந்த  ஜோஷ் இங்கிலிஸ் வந்த வேகத்தில் 3 ரன் எடுத்து களத்தை விட்டு வெளியேறினார். இருப்பினும் மறுபுறம் விளையாடிய லாபுசாக்னே  சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்து 71 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். லாபுசாக்னே தனது விக்கெட்டை இழந்த பிறகு கேமரூன் கிரீனும் 3 ரன்களில் அரைசதத்தைத் தவறவிட்டு 47 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த  மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஓரளவு ரன்கள் எடுக்க கடைசியில் இறங்கிய ஆடம் ஜம்பா வந்த வேகத்தில் 4 பவுண்டரி என மொத்தம் 29 ரன்கள் அடித்தார். இறுதியாக ஆஸ்திரேலியா அணி 50 ஓவரில்   அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், மார்க் வுட் மற்றும் அடில் ரஷித் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.

287 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோவ் களமிறக்க  வழக்கம் போல ஜானி பேர்ஸ்டோவ் நிலைத்து நிற்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து  ஜோ ரூட்  களமிறக்க வந்த வேகத்தில் 2 பவுண்டரி அடித்து 13 ரன்னில் வெளியேறினார். அடுத்து பென் ஸ்டோக்ஸ் , தொடக்க வீரர் டேவிட் மாலன் ஜோடி சேர்ந்து சரிவில் இருந்த அணியை மீட்டு கொண்டு வந்தனர்.

இருப்பினும் சிறப்பாக விளையாடிய டேவிட் மாலன் அரைசதம் அடித்த உடன் விக்கெட்டை இழந்தார். அடுத்த 2 ஓவரில் பென் ஸ்டோக்ஸ்  அரைசதம் விளாசி 64 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கேப்டன் ஜோஸ் பட்லர்  1 ரன் எடுத்து வெளியேற பின்னர் களமிறங்கிய கிறிஸ் வோக்ஸ், மொயீன் அலி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து  மொயீன் அலி 42, கிறிஸ் வோக்ஸ் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த அடில் ரஷித், டேவிட் வில்லி ஓரளவு  ரன் எடுக்க இறுதியாக இங்கிலாந்து அணி 48.1 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 253 ரன்கள் எடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலியா அணியில் ஆடம் ஜம்பா 3 விக்கெட்டையும்,  மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டையும்,  மார்கஸ் ஸ்டோனிஸ் 1 விக்கெட்டை பறித்தனர்.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் முதல் 2 போட்டிகள் தோல்வியை சந்தித்து  அடுத்தடுத்து 5 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணி  10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தில் நீடித்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்