ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்.! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு.!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பரிந்துரைத்து இருந்தது. ஆனால் அந்த பரிந்துரையை ஏற்க பல்கலைக்கழக துணைவேந்தராக உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துவிட்டார். இதற்கு திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் இன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் என்ற அடிப்படையில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்க உள்ளார்.
ஆளுநர் பொய் சொல்வதையே தொழிலாக கொண்டுள்ளார் – அமைச்சர் பொன்முடி.
இந்த விழாவை புறக்கணிப்பதாக ஏற்கனவே தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சங்கரய்யா அவர்கள் நாட்டுக்காக போராடி பலமுறை சிறை சென்றவர். தமிழகத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் மீது அக்கறை உள்ளவர்கள் போல பேசும் ஆளுநர் ஏன் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் அளிப்பதில் ஒப்புதல் அளிக்கவில்லை என்று குறிப்பிட்டு, ஆளுநர் பொய்களை மட்டுமே பேசி வருகிறார் என்றும் குற்றம் சாட்டி, இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ளும் பட்டமளிப்பு விழாவில் தான் கலந்து கொள்ளவில்லை என அறிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து நேற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மறுத்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.
மதுரையில் இருந்து காமராஜர் பல்கலைக்கழகம் செல்லும் வழியில் ஆளுநர் செல்லும் போது நாகமலை – புதுக்கோட்டை பகுதியில் கருப்பு கொடி போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட உள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதியில் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளது.