கூட்டாக இணைந்து 3 திட்டங்களைத் தொடங்கி வைத்த இந்திய மற்றும் வங்கதேச பிரதமர்கள்.!
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் கூட்டாக இணைந்து இன்று நடைபெற்ற மெய்நிகர் விழாவில் வீடியோ கான்பரன்சிங் மூலம், அகௌரா-அகர்தலா குறுக்கு-எல்லை ரயில் இணைப்பு, குல்னா-மோங்லா துறைமுக ரயில் பாதை மற்றும் மைத்ரீ சூப்பர் தெர்மல் பவர் ப்ராஜெக்ட் என்கிற மூன்று வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளனர்.
இதில் அகௌரா-அகர்தலா எல்லை தாண்டிய ரயில் இணைப்புத் திட்டம் ஆனது ரூ.392.52 கோடி இந்திய அரசின் மானியத்துடன் வங்கதேசம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் இணைப்பின் நீளம் 12.24 கிமீ ஆகும். இதில் வங்கதேசத்தில் 6.78 கிமீ மற்றும் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் 5.46 கிமீ இரட்டை ரயில் பாதையும் அடங்கும். டாக்கா வழியாக அகர்தலா மற்றும் கொல்கத்தா இடையேயான பயண நேரத்தை சிறிது குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குல்னா-மோங்லா துறைமுக ரயில் பாதைத் திட்டம் ஆனது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சலுகைக்கடன் மூலம், 388.92 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் மோங்லா துறைமுகம் மற்றும் வங்கதேசத்தின் குல்னா பகுதியில் தற்போதுள்ள ரயில் நெட்வொர்க்குக்கு இடையே கிட்டத்தட்ட 65 கிமீ அகல ரயில் பாதை அமைக்கும் பணியும் அடங்கும்.
இதன் மூலம், வங்கதேசத்தின் இரண்டாவது பெரிய துறைமுகமான மோங்லா, நாட்டின் அகல ரயில் பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக, மைத்ரீ சூப்பர் தெர்மல் பவர் ப்ராஜெக்ட் மூலம் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்டு வரும், வங்கதேசத்தின் குல்னா பிரிவில் ராம்பாலில் அமைந்துள்ள 1320 மெகாவாட் அனல் மின் நிலையம் ஆகும்.
இந்தத் திட்டம் இந்தியாவின் என்டிபிசி லிமிடெட் மற்றும் பங்களாதேஷ் பவர் டெவலப்மெண்ட் போர்டு ஆகியவற்றுக்கு இடையே உள்ள கூட்டு நிறுவனமான பங்களாதேஷ்-இந்தியா நட்பு பவர் கம்பெனி பிரைவேட் லிமிடெட் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று வளர்ச்சித் திட்டங்களும் நாட்டில் இணைப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துகிறது.