ரவுடி கருக்கா வினோத்திற்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி காவல்துறை மனு..!
கடந்த 27-ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முதல் வாசல் முன் பேரிகேட் (தடுப்பு) அருகில் கருக்கா வினோத் எனும் நபர் பெட்ரோல் குண்டு வீசினார். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்து மேலும் இரண்டு பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை கைப்பற்றினர்.
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளது என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், நீட் தேர்வு தொடர்பான பாஜகவின் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு பெட்ரோல் குண்டு வீசியதாக வினோத் கூறியதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த வழக்கில் கருக்கா வினோத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அதே நபர் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசி கைதான ரவுடி கருக்கா வினோத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கான சட்ட நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக அலுவலகம் மீதான பெட்ரோல் குண்டு தாக்குதல் வழக்கில் ரவுடி கருக்கா வினோத்திற்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கருக்கா வினோத் நவம்பர் 15-க்குள் பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.