குடை முக்கியம் மக்களே: 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது.
இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், இன்று காலை முதல் சென்னையின் அசோக்நகர், அண்ணாசாலை, மந்தைவெளி, நந்தனம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை பெய்து வருகிறது. சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளான கோயம்பேடு, மதுரவாயல், போரூர், அடையாறு உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்தது.
வானிலை ஆய்வு மையம் தகவலின்படி, அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நிலவரம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.