#WorldCup2023: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து பவுலிங் தேர்வு!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 26 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று சனிக்கிழமை என்பதால் இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. அதன்படி, முதல் போட்டியில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து, இரண்டாவது (பிற்பகல் 2 மணி) போட்டியில் நெதர்லாந்து-வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இதில், தற்போது முதலில் 27வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.
இப்போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. [நடப்பாண்டு உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணி முதலில் இரண்டு தோல்விகளை சந்தித்தாலும், அடுத்து ஹாட்ரிக் வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்து வருகிறது. நியூசிலாந்தை பொறுத்தவரை 5 போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
உலகக் கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 8, நியூசிலாந்து 3 முறை வெற்றி பெற்றுள்ளன. இதுபோன்று, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இதுவரை 141 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதில் ஆஸ்திரேலியா 95 போட்டிகளிலும், நியூசிலாந்து 39 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
அதேபோல், 7 முறை போட்டிகளுக்கு முடிவு அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், நியூசிலாந்து அணி தனது முதல் தோல்வியை சந்தித்த அதே தரம்சாலா மைதானத்தில் இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியுள்ளது. இரு அணிகளும் பேட்டிங், பவுலிங் என சமநிலையில் இருப்பதால் இன்றைய போட்டியில் அனல்பறக்கும் ஆட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் இதுவரை நடந்த போட்டிகள் அனைத்தும் பகல்-இரவு ஆட்டமாகவே இருந்தது. ஆனால், தற்போது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி பகல் நேரத்தில் நடைபெற இருக்கிறது. 2023 உலகக் கோப்பையில் இந்த மைதானத்தில் இதுவரை 4 போட்டிகள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா லெவன்ஸ்: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ்(w), கிளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ்(c), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் உள்ளனர்.
நியூசிலாந்து லெவன்ஸ்: டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம்(w/c), க்ளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட் ஆகியோர் உள்ளனர்.