மெக்சிகோவில் ஓடிஸ் சூறாவளியால் 27 பேர் உயிரிழப்பு..!

மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையைத் தாக்கிய மிக வலிமையான புயல்களில் ஒன்றான ஓடிஸ் புயல் தாக்கியதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

பசிபிக் பெருங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள மெக்சிகோவில் ஓடிஸ் சூறாவளி மணிக்கு 230 கி.மீ வேகத்தில் அதன் கரையை தாக்கியது. பலத்த காற்று மற்றும் மழை ஆகியவற்றால் அகாபுல்கோ  பகுதிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இந்த புயலால் மக்களின் வீடுகள், வெளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், மின்கம்பங்கள், மரங்கள், மொபைல் டவர்கள் என ஏராளமான சேதங்கள் ஏற்பட்டன. ஓடிஸ் கடற்கரையைத் தாக்கிய அகாபுல்கோவில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.

இது மெக்சிகோவில் உள்ள ஒரு பெரிய சுற்றுலாத் தலமாகும். பசிபிக் பெருங்கடலின் நீர் வெப்பமயமாதலால் இது நடந்ததாக அமெரிக்க விஞ்ஞானிகள் நம்புகின்றனர். 1950 க்குப் பிறகு இவ்வளவு வலுவான சூறாவளி வந்ததாக மெக்சிகோ அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், புயல் உருவாகி 12 மணி நேரத்திற்குள் கரையை தாக்கியதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க தயாராக எங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.

இதற்கிடையில் அகாபுல்கோ கடற்கரையில் ஓடிஸ் சூறாவளி தாக்கியதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர் என மெக்சிகோ பாதுகாப்பு அமைச்சர் ரோசா இசெலா ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் கூறுகையில்,  இந்த சூறாவளி கடந்து சென்ற பகுதிகளில் எங்களால் தொடர்பை பெற முடியவில்லை. ஓடிஸ் சூறாவளி அழிவு மிகவும் அதிகமாக இருந்ததால் ஒரு மின் கம்பம் கூட பாதிக்கப்பட்ட பகுதியில் நிற்கவில்லை. ஓடிஸ் சூறாவளி ஏற்படுத்திய காற்று மற்றும் கனமழையால் சிறு விவசாயிகளின் மக்காச்சோள பயிர்கள் முற்றிலும்  நாசமாகிவிட்டன.

ஓடிஸ் சூறாவளி சேதப்படுத்திய பகுதியில் மின்சாரத்தை மீட்டெடுப்பது முதன்மையானது உள்ளது.  சூறாவளியால் 27 பேர் இறந்ததற்கு வருந்துகிறோம். இதுவே மிகவும் வேதனை அளிக்கிறது.  சூறாவளியால்  ஏற்பட்ட அழிவைக்கட்டுப்படுத்த மெக்சிகோ அதிகாரிகள் இன்னும் பணியாற்றி வருகின்றனர் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்