தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.! வானிலை மையம் தகவல்.!
தமிழகத்தில் வரும் 29ம் தேதி 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று (24ம் தேதி) காலை மத்திய வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர புயலான ஹமூன், நேற்று மாலை 5.30 மணி அளவில் தீவிர புயலாக வலுவிழந்தது.
இந்த தீவிரப்புயல் இன்று (25ம் தேதி) காலை 1.30-2.30 மணி அளவில் மணிக்கு 15 கிமீ வேகத்தில் கிட்டத்தட்ட வடகிழக்கு நோக்கி நகர்ந்து, புயலாக வலுவிழந்து, வங்கதேச கரையை தெற்கு சிட்டகாங்க்கு அருகில் கரையைக் கடந்தது. இதனால் வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்தநிலையில், இன்று முதல் 28ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வரும் அக்டோபர் 29ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர் கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தொடர்ந்து 30 மற்றும் 31ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
அடுத்ததாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.