செங்கல்பட்டில் மின்சார ரயில் மோதி 3 மாற்றுத் திறனாளி சிறுவர்கள் உயிரிழப்பு.!
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் மூன்று சிறுவர்கள் நடந்து சென்றுள்ளனர். அப்பொழுது அப்பகுதி வழியே வந்த மின்சார ரயில், அந்த மூன்று சிறுவர்கள் மீது மோதியுள்ளது.
இந்த மோதலில் சிறுவர்கள் தண்டவாளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த மூன்று சிறுவர்களின் உடல்களை மீட்டு அடையாளம் கண்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதில் உயிரிழந்த 3 சிறுவர்களும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ், ரவி, மஞ்சுநாத் என்கிற மாற்றுத் திறனாளி சிறுவர்கள் எனக் கூறப்படுகிறது. தற்போது, இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், சென்னை, ஆவடி ரயில் நிலையத்தில் சிக்னல் கொடுத்தும் பிளாட்பார்மில் நிற்காமல் சென்ற மின்சார ரயிலின் 4 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன. இதில் ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் மின் கம்பிகள் சேதமடைந்தன. மின்சார ரயில் தடம் புரண்ட காரணத்தால், சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த மின்சார ரயில் தடம்புரண்ட விவகாரத்தில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. தடம் புரண்ட ரயிலை இருப்பு பாதைக்கு மாற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ரயில் தடம்புரண்டது குறித்து ரயில்வே துறையினர் குழு அமைத்து விசாரணை செய்து வருகின்றனர்.