372 காலிப்பணியிடங்கள்.. அண்ணா பல்கலைக்கழகத்திற்க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!
தமிழகத்தில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு தலைமையிடமாக இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்க்கு காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு தற்காலிக முறைப்படி அண்ணா பல்கலைக்கழத்தின் கீழ் செயல்படும் உறுப்பு கல்லூரிகளுக்கு ஆசிரியர்களை நியமித்தது. அவர்களுக்கு தொகுப்பூதியமாக 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தான் அண்ணா பல்கலைக்கழகம், நிரந்தர ஆசியர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. இந்த அறிவிப்பாணையை எதிர்த்து தற்காலிக ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். முதலில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்காலிக ஆசிரியர்கள் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனுவானது, உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏன் தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க முடியாது.? 13 ஆண்டுகளாக எதற்காக நிரந்தர பணிகளை நிரப்பாமல் இருக்கிறீர்கள் என பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் கேட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
அதன் பிறகு இன்று மீண்டும் வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. அப்போது, அண்ணா பல்கலைக்கழத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிகளுக்கு உடனடியாக தகுதியானவர்களை நிரப்ப வேண்டும். அதில் , ஏற்கனவே தற்காலிக ஆசிரியர் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கூறினர்.
இதனை ஏற்று, தற்காலிக ஆசிரியர்களுக்கு 5 சிறப்பு மதிப்பெண்ணும், நேர்முக தேர்வில் கூடுதல் சலுகையும் அளிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று, முதற்கட்டமாக 372 காலிப்பணியிடங்க்ளை 3 மாதத்திற்குள் நிரப்ப வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.