அதிமுகவினரை பிரிக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி தான் எங்கள் தலைவர்! – எஸ்.பி வேலுமணி பேட்டி

sp velumani

அதிமுகவின் 52வது ஆண்டு விழாவை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், கேபி முனுசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் பங்கேற்றனர்.

இதுபோன்று,  அதிமுக துவங்கி 52வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கோவையில் கொடி கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றிவைத்த பிறகு எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கு லட்டு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, எடப்பாடி பழனிசாமி தான் எங்கள் தலைவர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரைவில் முதல்வர் ஆவார். கோவை மக்கள் இபிஎஸ் முதலமைச்சராக வரவேண்டும் என்று தான் வாக்களித்தார்கள். கோவையில் இரண்டரை ஆண்டாக எந்த திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் எங்கள் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 40 இடங்களையும் கைப்பற்றும்.

அதிமுகவின் ஏக்நாத் சிண்டே என்று என்னை விமர்சனம் செய்து சமூகவலைதளங்களில் பரப்புவது திமுக தான் என்றார். மேலும், எப்படியாவது அதிமுகவை பிளவு படுத்திவிட வேண்டும் என்ற நோக்கில் திமுக ஐடி விங் செயல்பட்டு கொண்டிருக்கிறது. பாஜகவுடன் கூட்டணியிலிருந்து வெளியேறியதை திமுகவினரால் தாங்கமுடியவில்லை. இதனால் ஏதாவது குழப்பம் உண்டுபண்ண பார்க்கிறார்கள். அதிமுகவில் என்ன குழப்பம் செய்ய நினைத்தாலும் எதுவும் செய்ய முடியாது. எனவே, அதிமுகவினரை பிரிக்க முடியாது, எப்போதும் நாங்கள் பிரிய மாட்டோம் எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்