காவிரியில் வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு!
காவிரியில் இருந்து வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி, கர்நாடக அரசு தரவேண்டிய உரிய அளவு தண்ணீரை அம்மாநில அரசு தராமல் இருந்து வருகிறது. இதனால் காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை வாரியம், மத்திய அரசு என பல்வேறு முறைகளில் தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு முன்வைத்து வருகிறது. இருப்பினும், கர்நாடக அரசு தண்ணீர் தர மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்த சுழலில், நேற்று முன்தினம் காவிரி ஒழுங்காற்று குழு ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அப்போது, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 13,000 கனஅடி நீர் வீதம் அடுத்த 15 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், அக்.6 முதல் 31ம் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் வீதம் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்து இருந்தது. இதன்பின், காவிரி மேலாண்மை ஆணையம் அவசரம் கூட்டம் இன்று கூடுவதாக அறிவிக்கப்பட்டது.
இன்றைய கூட்டத்தில் தமிழகத்துக்கு வினாடிக்கு 16,000 கனஅடி நீர் வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு – கர்நாடகா இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை தொடர்பாக, இன்று காவிரி மேலாண்மை வாரிய கூட்டம் நடைபெற்றது. அதன்படி, டெல்லியில் காவிரி மேலாண்மை வாரிய தலைவர் எஸ்.கே.ஹெல்தர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது, காவிரியில் இருந்து வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 16ம் தேதி முதல் 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்க காவிரி ஆணையம் ஆணையிட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது.