மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு..! பாசனத்திற்கு நீர்திறப்பு இல்லை..!
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் நீர் அக்டோபர்-10 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்து வருவதால் பாசன நீர் திறப்பு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 13 ஆண்டுகளுக்கு பின் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 32 அடிக்கு கீழ் குறைந்துள்ள நிலையில், பாசனத்திற்காக திறந்து விடப்படும் நீர் நிறுத்தப்பட்டுள்ளதால், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர்.
இந்த நிலையில் இன்று சேலம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,528 கனஅடியிலிருந்து 9,347 கன அடியாக அதிகரித்துள்ளது மேட்டூர் அணை நீர்மட்டம் 31.31 அடியிலிருந்து 33.10 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையில் நீர் இருப்பு 8.81 டிஎம்சி ஆக உள்ளது. மேட்டூர் அணையில் பாசனத்திற்கு நீர் திறந்து விடப்படாத நிலையில் குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 500 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. பாசனத்திற்கு நீர் திறந்து விடாததால், டெல்டா விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.