உலகக்கோப்பை தொடர்: இந்திய அணியில் சுப்மன் கில்லுக்கு பதிலாக இவர்களா? வெளியான அதிர்ச்சி தகவல்!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில்லுக்கு சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதால், சென்னையில் நடந்த இந்தியா – ஆஸ்திரேலியா போட்டியில் பங்கேற்கவில்லலை. இவருக்கு பதிலாக இந்திய அணியில் ரோஹித் சர்மாவுடன், இஷான் கிஷான் களமிறங்கினார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சுப்மான் கில் சிகிச்சை பெற்று வருவதால் நாளை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டது.
அதாவது, கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுப்மான் கில் சென்னையில் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், நாளை நடைபெற உள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் 2வது லீக் போட்டியில் பங்கேற்கமாட்டார். கில்க்கு ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் குறைந்து வருவதால் சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தகவல் வெளியானது.
தற்போது சுப்மான் கில் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவரது உடல்நிலை குறித்து கண்காணித்து வருவதாகவும், சோர்வு மற்றும் காய்ச்சலுக்கு, உரிய சிகிச்சை வழங்கப்பட்டு, அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என காவேரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், வரும் 14ம் தேதி நடைபெறவுள்ள இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டியிலும் சுப்மன் கில் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.
டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து இன்னும் சுப்மான் கில் முழுமையாக மீளாததால் முக்கிய போட்டியான பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என்பதால், அவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் அல்லது யஷஸ்வி ஜெய்ஸ்வாலை உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் சேர்க்க அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இது உறுதியான தகவல் இல்லை.